இலக்கிய பின்புலம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கொங்கு நாட்டில் காங்கயம் வள நாட்டில் காங்கேயத்திற்கும், திருப்பூருக்கும் இடையில் காங்கேயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 496 படிக்கட்டுகளை கொண்ட ஒரு மலைக்கோயிலாகும். கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு வாகனங்கள் வந்து செல்ல இரண்டு கிலோ மீட்டர் மலைப்பாதை தார்சாலையாக உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழமையானதாகும். சிவமும், ஸ்கந்தரும் வேறல்ல என்பதை உணர்த்தவே இம்மலை சிவமலை என்று போற்றப்படுகிறது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், உத்தரவு காரணப்பொருள் என பல்வேறு சிறப்புகள் பொருந்திய சிவமலை புராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் மிகுந்தது. இம்மலையானது சிவபெருமான் இமயமலையை வில்லாக...திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கொங்கு நாட்டில் காங்கயம் வள நாட்டில் காங்கேயத்திற்கும், திருப்பூருக்கும் இடையில் காங்கேயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 496 படிக்கட்டுகளை கொண்ட ஒரு மலைக்கோயிலாகும். கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு வாகனங்கள் வந்து செல்ல இரண்டு கிலோ மீட்டர் மலைப்பாதை தார்சாலையாக உள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழமையானதாகும். சிவமும், ஸ்கந்தரும் வேறல்ல என்பதை உணர்த்தவே இம்மலை சிவமலை என்று போற்றப்படுகிறது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், உத்தரவு காரணப்பொருள் என பல்வேறு சிறப்புகள் பொருந்திய சிவமலை புராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் மிகுந்தது. இம்மலையானது சிவபெருமான் இமயமலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முற்பட்டபோது அதிலிருந்து விழுந்த சிறு துண்டே சிவமலை எனவும், ஸ்ரீ ஆஞ்சநேயர் சஞ்ஜீவி பருவதத்தை எடுத்துச் செல்லும்போது அதிலிருந்து உயர்ந்த மூலிகைகள் விழுந்து நிறைந்த மாமலை என்று போற்றப்படுகிறது. இம்மலையானது முதல் யுகத்தில் பொன் மலையாகவும், இரண்டாம் யுகத்தில் வெள்ளி மலையாகவும், மூன்றாம் யுகத்தில் செம்பு மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் ஆதலால் இந்தப்படி மாறுவதால், காமரூப ஜோதி கிரி என்றும் ஆன்றோர் அழைப்பர். இம்மலையில் உமையம்மை தவம் புரிந்து வந்ததால் சக்திசிவமலை எனவும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இம்மலைக்குப் பின்புறம் 4 கிலோ மீட்டர் தொலைவில் பட்டாலீயூர் எனும் ஸ்தலம் உள்ளது. இந்த ஸ்தலத்தில் உள்ள சிவபெருமானின் புதல்வரே மூலஸ்தானத்தில் ஸ்ரீ சிவாசலபதி எனும் திருநாமத்துடன் ஸ்ரீ வள்ளியம்மையுடன் காட்சி தருகிறார். வள்ளிதேவசேனா அம்பாள் சன்னதி தனியாக அமைந்துள்ளது. உற்சவர் கல்யாணக் கோலத்தில் வள்ளி தேவசேனா உடனமர் சுப்பிரமணியராக காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமியம்மன் சன்னதி, பள்ளியறை அருகில் உற்சவ மூர்த்திகள் சன்னதி உள்ளது. ஸ்ரீ நடராஜர் சன்னதி அருகில் சிவவாக்கிய சித்தர் முருகப்பெருமானை பூஜிப்பது போலும், சுதை பிம்ப சன்னதி உள்ளது. நுழைவு வாயிலில் துவார பாலகர்கள், நவ வீரர்கள் காட்சி அளிக்கிறார்கள். மேலும் மனிதர்களுக்கு ஏற்படும் ஜுர நோய் தீர வழிபடும் கடவுளாக ஸ்ரீ சுரோலோக நாயகி உடனமர் ஸ்ரீ சுரலோகநாதர் சுவாமி சன்னதி உள்ளது. ஆலய முன்புறம் கொடி மர விநாயகர் சன்னதி, பிரகாரத்தில் ஸ்ரீ சூரியன், பல்லாண்டுகளாக உள்ள புளியமரத்தடி விநாயகர் சன்னதி உள்ளது. மேலும் சன்னதி வலப்புறம் ஸ்ரீ ஞானாம்பிகை, ஸ்ரீ கைலாசநாதர் சன்னதி உள்ளது. தென்புறம் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. தென்மேற்கு திசையில் கன்னிமூல கணபதி, வடமேற்கில் ஞான தண்டாயுதபாணி சன்னதியும், வடக்கில் ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ சுமித்ர சண்டர் சன்னதிகள் உள்ளன. இத்தலபுராணம் தொடர்புடைய அம்பிகையால் ஏற்பட்ட சாபம் தீர நவகன்னிகைகள் வழிபட்டு சாபம் தீர்ந்த நவ கன்னிகைகள் சன்னதியும் உள்ளது. பின்புறம் ஸ்தல விருட்சமாக தொரட்டி மரம் உள்ளது. கிழக்கு நோக்கி திருநள்ளாரை போன்று தனி சனிபகவான் சன்னதியுள்ளது. ஆகம முறைப்படி சூரியனை பார்த்து அனைத்து கிரகங்களும் உள்ள நிலையில் நவக்கிரக சன்னதி உள்ளது. பழமை மாறாமல் ஷேத்ரபாலர் எனப்படும் ஸ்ரீ பைரவர் சன்னதி உள்ளது. வெளிப்புறம் கார்த்திகை தீபத்திருநாளில் தீபம் ஏற்றப்படும் தீபஸ்தம்பம் உள்ளது. கீழ்ப்பகுதியில் அரசமர விநாயகர், அரசு வேம்பு விநாயகர் சன்னதி படிஏறும் பொழுது படி விநாயகர் சன்னதி உள்ளது. இத்திருக்கோயிலில் திருவலகு செய்து வந்த சடைச்சி எனும் பணிப்பெண் காசியில் உள்ள கங்கை நீராட வேண்ட முருகப்பெருமான் காசி நகரில் உள்ள கங்கையை மலைக்கு பின்புறம் உள்ள நந்தவனத்திற்கு அருகில் தோற்றுவித்தார். தற்பொழுது ஆத்தா குளம் என இது போற்றப்படுகிறது. அவ்விடத்தில் சடைச்சியம்மன் சன்னதியும் உள்ளது. மேலும் அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் என பல்வேறு தீர்த்தங்கள் உள்ளடக்கிய மலை இதுவாகும். கானா சுனை, கரு நொச்சி போன்று பல்வேறு அற்புதங்கள் நிறைந்த மலை இதுவாகும். சங்கார் பால்வண்ணர் பட்டாலிச் சிவமலைக்குடக்கில் நல்ல சம்புநதியது உம்பர் நதியடி யம்மே சங்கத்தார் மூழ்கிய பொற்றாமரைப் பொய்கைக்கிணையாய் சிவ சைலத்திலுண்டு சரவணப் பொய்கை மேம்மே இந்த ஸ்தலத்தில் உள்ள தெப்பக்குளம் சரவணப்பொய்கைக்கு சமமானது. இம்மலையில் உள்ள முருகப்பெருமானை நகுடன் தன் சாபம் தீர பூஜித்து நற்பேறு பெற்றான். பலம்பொருத்திய அனுமன் அசுரர்களை அழிக்கும் வன்மம் தீரவும், தன்நலன் வேண்டி வரும் பக்தர்கள் நோய் தீர முருகப்பெருமானைப் போற்றி வழிபாடு செய்து தனி கோவில் கொண்டு சன்னதியுடன் மலைக்குப் பின்புறம் வீற்றிருக்கின்றார். இம்மலையில் உள்ள முருகப்பெருமானை அகத்திய முனி பூஜித்து ஆறெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றார். தேவர்கள் நாயகனாக உள்ள இந்திரன் இம்முருகப்பெருமானை பூஜித்து பொன்னுலகம் ஆண்டு நற்பெயர் பெற்றார். மேலும் இம்முருகப்பெருமானை வணங்கி சரஸ்வதி தேவி வாக்கு வரம் பெற்றார். மேலும் பல்வேறு முனிவர்கள், கணங்கள், தேவர்கள் ரிஷிகள் பூஜித்து வணங்கி நற்பெயர் பெற்ற ஸ்தல நாயகர் ஸ்ரீ சிவாசலபதி முருகப்பெருமான் ஆவார். தைப்பூசத்தேர்த்திருவிழாவில் மலையைச்சுற்றி அன்னதானங்கள் சிறப்பாக நடைபெறும். இத்திருத்தல மூர்த்திக்கு அன்னதான சிவாசலபதி என்ற சிறப்புப்பெயரும் உண்டு. சக்திசிவ மலையார்க்கு நித்திய மாறுகாலம் ஸ்தபன சிவருத்ர கும்பா பிஷேகஞ் சகியே சத்திலிங்கபூசை யிருபத்தெட்டாகம மந்திர ஷடாக்ஷரவுருச் செய்வ ராதிசைவ மறையோர் சகியே மெத்த மறையோர்கள் வந்து வேத சுதி முழங்கும் வேதாந்தமுஞ் சித்தாந்தமு மிகவிளங்குஞ் சகியே உத்தம காசிபரிஷி பூசித்த முருகேச ருத்தமபட்டன் பூசையி லுகந்திருப்பார் சகியே கோலா கலாபமயில் லோலனுங்குற வள்ளி குஞ்சரியுங் கணம்பிரியாள் கொலுவீற்றிருப்பாள் சகியே வேலோர்க்குக் கந்ததைலச் சந்தனத்தின் குழம்பும் வில்வக்குழம்பும் கரும்பின்பாலும் விபூதியும் சகியே பாலாறும் நெய்யாறுந் தேன்பழஞ் சர்க்கரையும் பலவின் சுளை மாங்கனிபல் பழமிளநீர் சகியே மேலான தீபதூப சோடசஉப சாரம் மிகமேலா நிற்காமல் நடக்குமடி சகியே மத்தமதி சூடியபால் வண்ணர் திருப்பட்டாலி மாநகர் காசிப கோத்திரன் பழனியப்பன் சகியே புத்திரர்சிவ கிரிபண்டிதர் பூசைபுரி நாகையனும் பொற் பணியலங்காரஞ் செய்வான் சிதம்பரையன் சகியே சுத்த வன்னம் முதலான நைவேதனஞ் செய்வான் சுவாமிக்கன்ன சத்திரத்தின் வள்ளியப்பன் சகியே பக்தியுள்ள ராயப்பனரைக் கட்டளைநந் தாதீபமும் பார்த்துக்கொண் டகி லாண்டையன் காத்திருப்பான் சகியே இங்கு தினமும் ஐந்து கால பூஜையும், ஆறாவதாக பள்ளியறை பூஜையும் நடைபெறுகின்றது. இந்த பூஜைக்கு சிவாச்சாரியார்கள் 496 படிகட்டுகள் ஏறி தீர்த்தம் கொண்டு வந்து பூஜிக்கும் வழக்கம் உள்ளது. மேலும் பூஜை, அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், உற்சவம் போன்ற அனைத்தும் ஆகம முறைப்படி பழனியய்யர் என்ற மரபில் வந்த காசிப கோத்திரத்தைச் சேர்ந்த ஆறு பங்கு ஸ்தானீகர்கள் பூஜை முறைகளை வழக்கமாக நடத்தி வருகின்றனர். இதை சிவமலை குறவஞ்சி மற்றும் ஸ்தல புராணத்தின் மூலம் அறியலாம். இத்திருக்கோயில் மேலும் சிறப்பு வாய்ந்தது உத்தரவுப்பெட்டி. இங்குள்ள முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி பொருள் உத்தரவு கொடுப்பார். அதை இறைவனிடம் சமர்ப்பிக்க பக்தர்கள் வரும்பொழுது பூவாக்கு கேட்டு அதனை உத்தரவுப்பெட்டியில் வைப்பார்கள். அதனால் நல்வினை தீவினை உலகில் ஏற்படும். ஆதலால் இவ்விறைவன் பின்வரும் நிகழ்வுகளை முன்னமே உணர்த்துவதால் காரணக்கடவுள் எனப் போற்றப்படுகிறார். 1.மஞ்சள் வைத்து பூஜை செய்த பொழுது மஞ்சள் விலை உயர்வு ஏற்பட்டது. 2.மிதிவண்டி வைத்து பூஜை செய்த பொழுது அதன் உபயோகம் குறைந்தது. 3.தண்ணீர் வைத்து பூஜை செய்த பொழுது சுனாமி ஏற்பட்டது. 4.மண் வைத்து பூஜை செய்த பொழுது பூமி விலை உயர்ந்தது. பல்வேறு பொருட்கள் மூலம் பல நன்மைகளையும், தீமைகளையும் ஏற்படுத்தி அதை முன்னமே உணர்த்துபவர் இவ்விறைவனே. மேலும் இத்திருக்கோயிலில் ஸ்கந்தசஷ்டி திருவிழா, தைப்பூசத்தேர்த்திருவிழா ஆகிய உற்சவங்கள் நடைபெறும் பொழுது உற்சவர் முருகப்பெருமான் அடிவாரத்தில், அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவ்வகையாக அனைத்து சிறப்பு வாய்ந்த ஸ்தலமாதலால் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடை நீங்கி திருமண பாக்கியம்பெறவும், புத்திர பாக்கியம் பெறவும், தொழில் வளம் பெறவும், விவசாய வளம் பெறவும், நோய் தீரவும் மற்றும் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் நடந்தேரவும், த்ரிசதீ அர்ச்சனை மற்றும் பல்வேறு பிரார்த்தனை பூஜை வழிபாடுகளின் மூலம் இங்குள்ள முருகப்பெருமான் அருள்தரும் ஆனந்த அற்புத அதிசய நடன நாடக வீக்ஷ்ஷண்யம் கொண்டு திருவருள் புரிகிறார். அவ்வேளைக்காய்ந்த பால் வண்ணநாதர் அருள்வேளைக் காணவொண்ணா தமரர்கூட்டம் எவ்வேளையிலு முனிவர் சித்தர்சங்க மிடைநீக்க மில்லாமலிருக்கும்வேளை முவ்வேளையிலுஞ் சிவமாமலையில் வந்து மும்மூர்த்திகளும் பூசைமுடிக்கும் வேளை செவ்வேளைக் காண்பதற்கு நல்லவேளை செவ்வேளை யிவ்வேளை தெரிசிப்பாயே எவ்வேளையிலும் முனிவர்கள், சித்தர்கள் இவ்விறைவனை வழிபட்டு நீக்கமில்லாமல் நிறைந்துள்ளனர். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் காலை, மதியம், மாலை என மூவேளையும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எக்காலமும் ஸ்ரீ சிவாசலப்பெருமானை வழிபடுவதால் இவ்விறைவனை வழிபட்டு அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்றிட தரிசனம் செய்து அருள்பெறுவோமாக. கந்தன் பாதம் கனவிலும் காக்கும் சிவன்மலை கந்தன் வழித்துணை வருவான்